ஒரு சமுகத்தின் விடுதலை வீரன் இன்னொரு சமுகத்தின் தீவரவாதி!!
“மனிதனாக பிறக்கும் போது யாரும் தோலின் நிறம், பிறப்பின் காரணமாக வெறுக்கப்படுவது இல்லை. அப்படி வெறுப்பவர்களுக்கு நாம் அன்பை சொல்லி தர வேண்டும். ஏனென்றால் மனித இதயத்திற்கு அன்பு இயல்பாக வரும்”
-நெல்சன் மண்டேலா(1918 – 2013)
http://siragu.com/?p=11592
(one man’s freedom fighter is another man’s terrorist)
1960 களில் ஒரு நாள் அது. தென்
ஆப்பிரிக்காவில் நிறவெறி தலை விரித்து ஆடிய வருடங்களில் ஒன்று. மூன்று
சிறுமிகளுடன் ஒரு இந்திய வம்சாவளி பெண், தன் வாகனத்துக்கு வாயு ஏற்ற
ஜோஹான்ஸ்பெர்க்(Johannesburg) அருகே இருந்த வாயு நிலையத்திற்கு சென்றார்.
அந்த வாயு நிலையத்தின் முதலாளி மற்றும் வேலையாட்கள் எல்லோரும் வெள்ளையர்கள்
தான். வெள்ளை நிறமில்லாத ஒருவர் வந்து இருப்பதை பார்த்த வெள்ளை
வேலையாட்கள், அந்த வாகனத்தின் சாவி மற்றும்,அந்த பெண்மணி வைத்து இருந்த
மொத்த பணத்தையும் பிடுங்கி கொண்டனர்.செய்வதறியாது திகைத்து இருந்த
பெண்மணிக்கு மற்றொரு அதிர்ச்சி.இரண்டு சிறுமியர்கள் சிறுநீர் கழிக்க
வேண்டும் என்று அடம்பிடிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமாக
நின்றார். அவரின் குழப்பத்தின் காரணம் அங்கு இருந்த கழிப்பறையை
வெள்ளையர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி இருந்தது. அங்கு இருந்த வெள்ளை
ஆண்களின் மத்தியில் இந்த சிறுமியர்கள் தர்மசங்கடமான நிலையில்
சிறுநீர்கழிக்க வேண்டி இருந்தது. நிறவெறி ஆட்சிகாலத்தில் நடந்த மிக மோசமான
சம்பவங்களில் இது ஒன்று.
நிறவெறி
ஆட்சியில் வெள்ளையர்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்கும், தங்கள்
குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கிடைக்கும். எங்கு வேண்டுமானாலும் வாழ்ந்து
கொள்ளலாம். ஆனால் கருப்பர்கள் வேலைகிடைத்தால் ஜோஹான்ஸ்பெர்க்(Johannesburg)
சேரி பகுதியில் ஆட்டுக் கூட்டம் போல் வாழ்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
வேலையில்லாத கறுப்பின மக்களின் வீடுகள் தரைமட்டமக்க பட்டன. அங்கு இருந்து
அவர்கள் ஊர் ஒதுக்குப்புறத்திற்கு மாற்றபடுவர்.இது தான் நிறவெறி ஆட்சியின்
மிக முக்கிய “பிரிவினை(Separateness)“ கொள்கை.இந்த இரக்கம் இல்லாத கொள்கையை
எதிர்த்து போராட யார் வருவார்கள் என்று கறுப்பின மக்கள் ஏங்கிக் கொண்டு
இருந்த போது, வந்த இயக்கம் தன் ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ்(ANC). அதன்
முக்கிய புரட்சி தலைவர்களில் ஒருவர் தான் “நெல்சன் மண்டேலா”
நிறவெறியும் காந்தியும்
ஐரோப்பியர்கள் ஆப்ரிக்கா கண்டத்தை
ஆக்கிரமித்த நாள் முதல், பூர்விக குடிகளான கருப்பு இன மக்கள் மீது
அடிமைத்தனத்தை ஏற்ற தொடங்கிவிட்டனர். 18 ஆம் நூற்றாண்டின் ஆண்டுகளில்
ஆங்கிலேயர் தென் ஆப்ரிக்காவை ஆளத் தொடங்கிய பொழுது, அங்கு இருந்த மக்கள்,
வெள்ளையர்,கறுப்பர்,நடு நிறத்தவர்(Colored),இந்தியர் என்று நான்கு விதமாக
வேறுபட்டு இருந்தனர்.வெள்ளையர்கள் ஆளப் பிறந்தவர்கள் என்றும், மற்றவர்கள்
ஆளும் வர்க்கத்துக்கு துணை நிற்க வேண்டிய அடிமைகள் என்று ஆளும் வெள்ளை அரசு
அறிவித்து இருந்தது.
1890 ஆம் ஆண்டு ஒரு வழக்கு சம்பந்தமாக
வாதாட வந்த மகாத்மா காந்தி, வெள்ளையர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்க பட்ட
முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்ய முற்பட்ட போது வெள்ளை
அதிகாரிகளால் வெளியே தூக்கி எறியப்பட்டார்.இந்த நிகழ்வின் மூலம்
இந்தியர்கள் நடத்தப்படும் விதம் கண்டு கொதித்துப் போனார். தென் ஆப்பிரிக்கா
இந்திய காங்கிரஸ் என்ற இயக்கத்தின் மூலம் இந்தியர்களுக்கு இழைக்கப்படும்
அநீதிகளுக்கு எதிராக போராடினார். சுமார் 21 ஆண்டுகள் அகிம்சை வழி மூலம்
போராடிய காந்தி, பெரிய வெற்றி ஏதும் பெறவில்லை என்ற போதும்,
இந்தியர்களுக்கு என்று ஆங்கிலேயே அரசிடம் சில சலுகைகள் மற்றும் மரியாதைகளை
பெற்றுத் தந்தார். தன் தாய்நாட்டில் நடைபெற்றுக் கொண்டு இருந்த சுதந்திர
போராட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டிருந்த நிலையில், தென் ஆப்ரிக்காவிற்கு
பிரியாவிடை கொடுத்து விட்டு இந்தியா சென்றார் காந்தி.
நெல்சன் மண்டேலா, ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் உருவான வீதம்:
காந்திய வழியை பின்பற்றி, கருப்பு இன
மக்களும், ‘ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ்’(African National Congress(ANC))
என்ற இயக்கத்தை உருவாக்கி நிறவெறிக்கு எதிராக போராடினர்.1944 ஆம் ஆண்டு ஒரு
நாள், ஜோஹன்னஸ்பர்க்(Johannesburg) தெருவில் ஓடி கொண்டு இருந்த ஒரு
‘ட்ரம்’(TRAM) வண்டியில் முன்று கருப்பு இளைஞர் ஏறினர். இதை பார்த்த ட்ரம்
கண்டக்டர் உடனே போலீசை அழைத்தார். சில நிமிடத்தில் அங்கு வந்த போலீஸ் அந்த
முன்று கருப்பு இளைஞர்களை கைது செய்தது. கைது செய்வதற்கு காரணம், தென்
ஆப்ரிக்கா பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்ய ‘குபார்(Kuffar)’(கருப்பர்கள்
குறித்த இழிவான சொல்) அனுமதி இல்லை. அந்த இளைஞர்களில் ஒருவர் தான்
“நெல்சன் மண்டேலா’
இந்த கைது சம்பவம், சாதாரணமாக சட்டம்
படித்துகொண்டு இருந்த மண்டேலாவிற்கு, நிறவெறி ஆநீதி எதிர்த்து போராட
வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆப்ரிக்கா இளைஞர் காங்கிரஸில்
சேர்ந்த மண்டேலா அஹிம்சை முறையில் வெள்ளையர்களுக்கு எதிராக போராட்டத்தை
1944 ஆம் ஆண்டு துவங்கினார். பல ஆண்டு நடைபற்ற கருப்பு இன மக்களின் அகிம்சை
போராட்டம் ஏகாதிபத்திய வெள்ளை அரசை ஒரு நெருக்கடி நிலைக்கும் தள்ளவில்லை.
1961 ஆம் ஆண்டில் ஷர்ப்விள்ளே(Sharpville) என்ற இடத்தில் ஒரு அகிம்சை
போராட்டத்தின் போது, 70 அப்பாவி மக்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில்
கொல்லபட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, மண்டேலா உட்பட பல கறுப்பின
தலைவர்கள் அகிம்சை போராட்டம் இனி செல்லுபடி ஆகாது என்று முடிவுக்கு
வந்தனர். வன்முறை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
வன்முறை நாட்கள்:
தான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை என்று மண்டேலா
கூறிய போதும், மாவோ(Mao) மற்றும் பிடேல் காஸ்ட்ரோ(Fidel Castro) வின்
கொரில்லா சண்டை யுத்திகளை பெரிதாக விரும்பினார். இதற்காக மொரோக்கோ மற்றும்
எதியோபியா சென்று ஆயுத பயிற்சி எடுத்து கொண்டார்.சில உள்நாட்டு வன்முறை
தாக்குதலிலும் ஈடுபட்டார். தாங்கள் மேற்கொள்ளும் வன்முறை போராட்டத்திற்கு
அதரவு திரட்ட வெளிநாட்டு அதிகாரிகளை சந்திக்க முயற்சி செய்தார்.அப்படி ஒரு
முறை அமெரிக்க அதிகாரியை சந்திக்கச் சென்ற மண்டேலா தென் ஆப்ரிக்கா போலிசால்
கைது செய்ய பட்டார். சில செய்தி ஊடகங்கள் மண்டேலாவின் கைது சம்பவத்தில்
அமெரிக்கா உளவு இயக்கமான CIAவின் பங்கு உள்ளது என்று குறிப்பிடுகிறனர்.
நீதிமன்றம் அவரது வன்முறை சம்பவங்களுக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல்
விதித்தது.
1964 ஆம் ஆண்டில் வன்முறையில் ஈடுபட்ட
ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்
மொத்தமாக தென் ஆப்ரிக்கா போலீசால் பிடிக்கப்பட்டனர். ரிவோனியா
டரியல்(RIVONIA Trial) என்ற பெயரில் நடைபெற்ற விசாரணையின் முடிவில்,
ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் தேச துரோகம் மற்றும் தேசிய அரசை
கவிழ்க்க சதி செய்தாகவும், அரசு சொத்துக்கு சேதம் விளைவித்தகாவும் குற்றம்
சாட்டப் பெற்றனர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆப்ரிக்கா தேசிய
காங்கிரஸ் முக்கிய தலைவராக இருந்த மண்டேலாவிற்கு ஆயுள் தண்டனை
வழங்கப்பட்டது.
சிறைவாசம்:
தென் ஆப்ரிக்கா கேப் டவுன் அருகே இருந்த
ரோப்பேன் தீவு(Robben Island) சிறையில் மண்டேலா அடைக்கப்பட்டார்.இது நமது
அந்தமான் சிறை போன்று கொடுமைகள் நிறைந்த சிறை.மண்டேலா முதன் முதலாக இந்த
சிறையில் கால் பதித்த போது,அங்கு இருந்த வெள்ளை சிறை காவலர் ஒருவர், “இனி
நீ உன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க முடியாது, உன் இறப்பு இங்கு தான்
ஏற்படும்” என்று ஏளனமாக பேசினார்.வசதிகள் குறைந்த கடைசி நிலை(Class D) சிறை
இருப்பிடம் மண்டேலாவிற்கு வழங்க பட்டது. சிறைசாலையில் கல் உடைக்கும் பணியை
மேற்கொண்டார்.சுண்ணாம்பு கற்களை உடைக்கும் போது, சூரிய ஒளி
பிரதிபலிப்பில் இருந்து நமது கண்களை காக்க கண்ணாடி அணிய வேண்டும். ஆனால்
மண்டேலவிற்கு சிறையில் கண்ணாடிகள் மறுக்க பட்டன. இதனால் ஒரு கண்ணில் பாதி
பார்வையை அவர் இழந்தார்.மண்டேலா சிறையில் வாடிய காலத்தில், அவரின்
தாயாரும்,சகோதரரும் மறைந்தனர். அவர்களின் இறுதி சடங்கிற்குக் கூட பங்கேற்க
வெள்ளை அரசு அனுமதி தரவில்லை.
“மண்டேலா ஒரு தீவரவாதி” – அமெரிக்கா,பிரிட்டன்:
நிறவெறி அரசுக்கு எதிராக உலகமெங்கும்
நெருக்குதல் வர, “வன்முறையை கை விட்டால், விடுதலை செய்ய தயார்” என்று
வெள்ளை அரசு மண்டேலாவிற்கு தூது அனுப்பியது.இதை நிராகரித்த மண்டேலா “என்
உயிரிருக்கும் வரை நிறவெறிக்கு எதிராக போராடுவேன்” என்று பதிலளித்தார்.1977
ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா நிறவெறி அரசுக்கு எதிராக, அமெரிக்கா,பிரிட்டன்
உதவியுடன் ஐ.நா பொருளாதார தடை விதித்தது. இந்தப் பெரிய நிகழ்வு நடந்த
போதும், அமெரிக்கா பிரிட்டன் நாடுகள் மண்டேலா விடுதலை பற்றி பேச
மறுத்துவிட்டன. அக்கால சோவியத் கூட்டமைப்புடன்(Soviet Union) இருந்த பனிப்
போர் காரணமாகவும், ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் கட்சியின் சில கொள்கைகள்
கம்யூனிஸ்ட் கொள்கைகளுடன் ஒத்து இருந்ததால், மண்டேலாவை கம்யூனிஸ்ட் ஆக இந்த
நாடுகள் சித்தரித்தன. அப்போதைய அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஜனாதிபதிகள்
“ரீகன்(Reagon)”,”தாட்சர்(Thatchar)” மண்டேலாவை “தீவரவாதி” என்றே கூறினர்.
அமெரிக்கா தீவரவாதி பட்டியலில் 2008 ஆம் ஆண்டு வரை மண்டேலாவின் பெயர்
இருந்தது என்பது ஒரு மோசமான உண்மை. நிறவெறி அரசிற்கு எதிராக ஐ.நா பொருளாதார
தடை விதித்த போதும் இஸ்ரேல் மற்றும் தைவான் போன்ற நாடுகள் மறைமுகமாக
நிறவெறி அரசை ஆதரித்து வந்தன.
வெற்றி வெற்றி வெற்றி !!:
1989 ஆம் ஆண்டு டி க்ளெர்க்(D Klerk)
என்ற மிதவாத வெள்ளை ஆட்சியாளர் நாட்டின் பிரமமந்திரி ஆனார். தென் ஆப்ரிக்கா
– அங்கோலா போரில் இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாடு மிகவும்
நலிவு அடைந்து இருந்த நேரம் அது. நாட்டை காப்பாற்ற டி க்ளெர்க் முக்கிய
முடிவு ஒன்று எடுத்தார்.மண்டேலா மற்றும் அவரின் ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ்
உறுப்பினர் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். ஆப்ரிக்கா தேசிய
காங்கிரஸ் மீது இருந்த தடைகளை விலக்கினார். Feb 11 1990, ஞாயிறு அன்று
மண்டேலா விடுதலை செய்யப் பட்டார். சில மாதங்களில் ஆப்ரிக்கா தேசிய
காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்றார். பின்பு டி க்லேர்க்வுடன் பேச்சுவார்த்தை
நடத்தி நிறவெறி அரசுக்கு முற்றுபுள்ளி வைத்தார்.1994 ஆம் ஆண்டு நடைபெற்ற
தேர்தலில் பங்கேற்று மாபெரும் வெற்றி அடைந்தார். நாட்டின் முதல் கருப்பு
பிரதமர் ஆனார்.
பிரதமாரான முதல் உரையில் இவ்வாறு கூறினர்
“இறுதியில் நாம் சுதந்திரம் அடைந்து
விட்டோம்.ஆனால் நமது போராட்டம் இன்னும் முடிய வில்லை. பசி,வறுமை,பாலியல்
பாரபட்சம் போன்ற பெரிய தீங்குகளுக்கு எதிராக போராடுவோம்.இந்த போராட்டத்தில்
வெள்ளையர்,கறுப்பர் என்று பாரபட்சம் கிடையாது.இனி இந்த அழகான நாட்டில்
அடிமைத்தனம் வரவே வராது. கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார்”.
ஆட்சிகால சாதனைகள்:
சுமார் ஆறு ஆண்டுகாலம் பிரதமராக ஆட்சி
செய்த மண்டேலா,1999 ஆம் ஆண்டில் அடுத்த தலைமுறை தலைவர்களுக்கு வழிவிட்டு
பிரதமந்திரி பொறுப்பில் இருந்து விலகினார்.மண்டேலாவின் ஆறாண்டு கால
சாதனையாக ஜனநாயகம் தழைத்து ஓங்கியது. நிறவெறி ஆட்சியின் போது ஒரே ஒரு
வெள்ளை கட்சி மட்டும் தன் இருந்தது. மண்டேலாவின் ஆட்சியின் போது பல ஜனநாயக
கட்சிகள் உதித்தன. வெள்ளையர்களை பழி வாங்க,“வெள்ளையர்கள் நிலங்கள்
ஆக்கிரமிப்பு” போன்ற செயலில் இடுபடாமல், மிகுந்த அறிவாற்றலால் எல்லோரையும்
ஒருங்கிணைத்து, நாட்டு பொருளாதாரத்தை வேகமாக வளர்த்தார். நிறவெறி
ஆட்சியால், பெறும்பாலான கருப்பு இன மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே
தள்ளப்பட்டு இருந்தனர், இவர்களின் நிலை மண்டேலா ஆட்சியில் முன்னேற்றம்
அடைந்தது. ஊட்டச்சத்தின்மை (Malnutrition) காரணமாக குழந்தைகள் இறப்பு,
வெகுவாக குறைக்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவின் மிக பெரும் தலைவலியாக இருந்த
“எய்ட்ஸ்(AIDS)” நோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த மண்டேலா
அரும்பாடு பட்டார்.இந்த மாபெரும் புரட்சி நாயகனுக்கு 1994 ஆம் ஆண்டு
அமைதிக்கான நோபெல் பரிசும், இந்தியாவின் உயரிய பாரத ரத்னா விருதும்
வழங்கப்பட்டன.
இப்படி கருப்பு இன மக்களின் ஒளியாகவும்,
உலக புரட்சி உருவகமாகவும் இருந்த கருப்பு நிலா,அமைதிப் புறா,கருப்பு
சிங்கம் Dec 6 2013 தினத்தன்று மறைந்தது. உலக மக்கள் மற்றும் உலகத்
தலைவர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.அவர்
உடல் மண்ணிற்கு சென்ற போதும், அவரின் புரட்சி வாக்கியங்கள், பல புரட்சி
இயக்கங்களுக்கு அநீதியை எதிர்த்துப் போராட உந்து கோலாக இருக்கும். இந்த
புரட்சி நாயகனுக்கு வீரவணக்கம்!!
“மனிதனாக பிறக்கும் போது யாரும் தோலின் நிறம், பிறப்பின் காரணமாக வெறுக்கப்படுவது இல்லை. அப்படி வெறுப்பவர்களுக்கு நாம் அன்பை சொல்லி தர வேண்டும். ஏனென்றால் மனித இதயத்திற்கு அன்பு இயல்பாக வரும்”
http://siragu.com/?p=11592
No comments:
Post a Comment