Thursday, April 16, 2015

அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க ......



திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டாரம் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்பட ஏதுவான இதமான கால நிலையைக் கொண்டதாகும். வேளாண்மைத் தொழிலை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட கிராமங்கள் நிறைந்த பகுதியாகவும் உடுமலைப்பேட்டை வட்டாரம் விளங்குகிறது. 38 பஞ்சாயத்துக்களைக் கொண்ட இவ் வட்டாரத்தில் உடுமலைப்பேட்டை நகரமும் அடங்கும். ஏறத்தாழ 2,30,000 மக்கள் இவ்வட்டாரத்தில் வாழ்ந்து வருகின்றனர். உடுமலைப்பேட்டையில் கல்வி கற்று உலகின் பல நாடுகளிலும் இந்தியாவின் பல நகரங்களிலும் பணிபுரிபவர்கள் உண்டு. இப்பகுதியில் படித்து நாற்பது நாற்பத்தைந்து வயதைக்கடந்தவர்கள் பெரும்பாலோர் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்களே.

மக்களின் அறிவுக்கண்ணைத் திறந்து மக்களிடம் செல்வாக்குச் செலுத்திய இப் பள்ளிகள் இன்று தங்களைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்றன. தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வைப்பது பெருமையான நடவடிக்கையாக ஒரு பகுதி மக்களிடம் மாறியது. அரசுப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் உளவியல் ரீதியாக சமமற்ற நிலையில் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறையத் தொடங்கின. இன்று வேக வீச்சாகி தமிழகம் முழுவதும் 1700 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டும் மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி இன்னும் பல பள்ளிகள் மூடப்படலாம் என்ற அபாயத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன.தமிழகத்தின் ஒரு பகுதியான உடுமலை வட்டாரத்தையும் இந்த தனியார்மய மெட்ரிக் கல்விக் காற்று விட்டு வைக்கவில்லை.

அரசு, நகராட்சி, ஆதி திராவிடர் நலத்துறை, எஸ்.எஸ்.ஏ மூலம் துவக்கப்பட்ட பள்ளிகள் உதவி பெறும் பள்ளிகள் என ஆரம்ப, நடுநிலைப் பொதுப் பள்ளிகள் மொத்தம் 119 செயல்படுகின்றன. 412 ஆசிரியர்கள் இப்பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். மேலும் 5 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 9 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 8053 மாணவ மாணவியர்களும், 5 உயர்நிலைப் பள்ளிகளில் 1010 மாணவ, மாணவியர்களும் 9 அரசு மேநிலைப் பள்ளிகளில் 5640 மாணவ, மாணவியர்களும் 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 6915 மாணவ, மாணவியர்களும் ஆக மொத்தம் 21,618 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இவ்வட்டாரத்தில் உள்ள சைனிக் பள்ளி நீங்கலாக இரண்டு சி.பி.எஸ்.இ பள்ளிகளும் ஒரு இன்டர்நேசனல் பள்ளி மற்றும் 31 மெட்ரிக் பள்ளிகளும் செயல்படுகின்றன.

இப் பள்ளிகளில் ஒரு சிலவே 15 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டவை. மற்ற அனைத்தும் சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டவையே. இப் பள்ளிகளில் எல். கே.ஜி முதல் 12 ஆம் வகுப்புவரை 17,836 மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இங்கிருந்து பொள்ளாச்சி, தாராபுரம் பகுதிகளில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் படிக்க மாணவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி வாகனங்கள் காலை ஏழு மணிக்கே உடுமலை நகரை வலம் வருவதைக் காணலாம். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி வரும் ஆண்டுகளில் இப்பகுதி அரசு ஆரம்பப் பள்ளிகள் மூடப்படுமானால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 2015-16 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் பள்ளிக் கல்விக்காக ரூ 20,936.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. “கடை விரித்தேன் கொள்வாரில்லை’’ என்பதைப் போல சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட பல நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தியும் அரசுப் பள்ளியில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வரக்காரணம் என்ன?. ஒரு கிராமத்தில் உள்ள நண்பர்களுடன் பேசிக் கொண்டிந்த போது அரசு இவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தும் குழந்தைகளை சுயநிதி தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை பெருமையாக கருதுகிறீர்களே என்று கேட்டவுடனே அவர்களின் பதில் முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்களா? எங்கள் குழந்தைகள் மட்டும் ஏன் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும், நாங்கள் முன்னேற வேண்டாமா?. பதில் கூற முடியவில்லை.தரமான கல்வி, திறன்மிகுந்த கல்வி ஆங்கில வழியில் கற்றுத் தரும் சுயநிதிப் பள்ளிகளில் மட்டும்தான் கிடைக்கிறதா என்ற கேள்வி பெரிதாக எழுந்தது. சில மாதங்களுக்கு முன் உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்குமான கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டிகளை நடத்தியபொழுது அனைத்துப் பள்ளி மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர். முழுக்க முழுக்க விருப்பு வெறுப்பின்றி பதிவெண்கள் கொடுத்து இப்போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளின் நடுவர்களாக சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களும் இருந்தனர். போட்டிகள் முடிவில் அரசுப் பள்ளி மாணவர்கள் முதல் அல்லது இரண்டாமிடத்தைப் பிடித்தது வியப்பை அளித்தது. கடைசி நேரத்தில் வந்து ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட போதுமான கலர் பென்சில்கள் கூட இல்லாத பத்தாவது படிக்கும் ஒரு அரசுப்பள்ளி மாணவன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது திறமையைக் காட்டுவதாய் இருந்தது. இது அரசுப் பள்ளிகளிலும் திறன்கள் நிறைந்த கல்வி மாணவர்களுக்கு அளிக்கப்படுவதைக் காட்டுகிறது. உடுமலை அரசு மகளிர் மேல்நிiலைப் பள்ளி மாணவி மாநில அளவில் நடைபெறும் அறிவியல் படைப்புப் போட்டிகளில் மூன்றாண்டுகள் தொடர்ந்து முதலிடம் பெறுவது மேலும் ஒரு உதாரணமாகும். அரசுப் பள்ளிகளில்தான் முழுக் கல்வித் தகுதி பெற்ற அரசு நடத்தும் திறனறி தேர்வுகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பது நடைமுறை உண்மை.

ஒரு அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மனது வைத்தால் மாணவர் சேர்க்கை குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும், கூடுதலாக்கவும் முடியும் என்பதற்கு சின்னவீரம்பட்டி நடுநிலைப் பள்ளி, குறிஞ்சேரி அரசு ஆரம்பப்பள்ளி ஆகியன எடுத்துக்காட்டுகளாகும். சின்னவீரம்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை சிறப்பாக அமைத்து பள்ளிக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுள்ளார். சுத்தமாக உள்ள பள்ளி வளாகத்தில் கணினிப் பயிற்சி கீ போர்டு பயிற்சி உள்பட மாணவர்களுக்கு ஆசிரியர்களால் வழங்கப்படுகிறது. ஊரிலுள்ள பெரியவர்கள் வசதி படைத்தவர்கள் பள்ளிக்கு வருகை தருவது,உதவிகள் செய்வது போன்ற நல்ல செயல்களால் மாணவர்கள் எண்ணிக்கை குறையாமல் ஆண்டுதோறும் அதிகரிக்க காரணமாய் அமைகிறது. தற்போது 172 மாணவர்கள் படித்து வருகின்றனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் 90 சதவிகிதத்திற்கு குறையாமலும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலும் 10 ஆம் வகுப்பில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளும் உண்டு. என்றாலும் ஒரு உண்மை நெஞ்சைச் சுடுகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதி சார்ந்தவர்களின் குழந்தைகளாக உள்ளார்கள். இது பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக சுயநிதிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் என இரு கூறாகப் பிரிக்கிறது. சகோதரத்துவம், கூடி வாழ்தல், விட்டுக் கொடுத்தல் முதலிய பண்புகள் சமூகத்தில் வளராமல் சிதறடிக்கப்படும் சூழ்நிலையை உருவாக்குகிறது. சமூக வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளும் மோசமான நடவடிக்கையாக உள்ளது. அரசு மட்டும்தான் அனைவர்க்கும் சமமான கல்வி வழங்கக் கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாகும். எனவே கல்வியில் தனியார் மய ஊக்குவிப்பைக் கைவிடுவதுடன் பொருளாதார அடிப்படையில் கல்வி என்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.உடுமலை வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க அரசு, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுக்கல்வியை மேம்படுத்த விரும்புவோர் அனைவரும் கைகோர்த்துச் செயல்பட வேண்டியது இன்று அவசர அவசியமாகிறது.
                                                                                                     -ச செல்லதுரை 
                                                                                                     

No comments:

Post a Comment